ஈரான் மீது இன்று (1) இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் சயது காண்டின், குவாசர், வனக் சதுர்க்கம், மொடஹரி ஸ்ட்ரீட் உட்பட பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னணி
அமெரிக்காவும் இஸ்ரேலும் நேற்று (28) ஈரான் மீது பாரிய கூட்டுத் தாக்குதல் நடத்தின.
இந்நிலையில் உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் வீட்டை குறிவைத்து தலைநகர் தெஹ்ரானின் புறநகர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் முழுவதும் பல்வேறு நகரங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டன.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது.
இரு பக்க போட்டித் தாக்குதலுக்கு மத்தியில் ஈரானிய உயர் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். எனினும், அதனை ஈரான் அதிகாரிகள் மறுத்துவந்த நிலையில், ஈரான் அரச ஊடகங்கள் உயர் தலைவர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தின.
அதனைத் தொடர்ந்து, ஈரான் உயர் தலைவரின் மகள், மருமகன், பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து பல நாடுகளில் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளதோடு, உலகின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல நாடுகளில் அமெரிக்க அரச நிறுவனங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

