கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நாளைய தினம் வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.
நாளை மாலை நற்கருணை ஆராதனையும் வழிபாடுகளும் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
கச்சதீவு யாத்திரைக்காகச் செல்லவிருக்கின்ற யாத்திரிகர்களுக்கான பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அதன்படி, நாளை அதிகாலை 4 மணியிலிருந்து பகல் 1 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கிய பேருந்து பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
குறிக்காட்டுவான் இறங்குதுறையில் இருந்து படகுச் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இங்கே போக விரும்புபவர்கள் குறிக்கட்டுவான் இறங்குதுறையிலே தங்களுடைய அடையாள அட்டையை காட்டி தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.
வேறு எங்கும் அந்தப் பதிவுகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேவேளை அங்கு செல்லும் யாத்திரீகர்கள் வெள்ளிக்கிழமைக்கு தேவையான உணவுகளைக் கொண்டுசெல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு உணவு அங்கே வழங்கப்படமாட்டாது. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலி முடிந்த பிறகு காலை உணவு யாத்திரீகர்கள் எல்லாருக்கும் வழங்கப்படும்.
அதேவேளை படகுச் சேவையின் ஒரு வழிக் கட்டணமாக 1,200 ரூபாய் அறவிடப்படும். அங்கு செல்வோர் தமக்குத் தேவையான குடிநீரையும் கொண்டுசெல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்குப் பின்னர் படகுச் சேவைகள் இயங்கமாட்டாது.
அத்துடன் இந்த வருடம் இந்தியாவின் சிவகங்கை மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட குருக்கள், துறவிகள் அங்கே செல்கின்றனர்.
அதேவேளை இலங்கையைச் சேர்ந்த யாழ். மறை மாவட்ட குருமுதல்வருடன் ஐம்பதுக்கு மேற்பட்ட குருக்கள், துறவிகள் இந்தத் திருநாளில் பங்குபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

