வனவளத்திணைக்களம் 2024 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்பு மூலம் 293 குடும்பங்களின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தியுள்ளதாக, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம் மற்றும் முசல்குத்திக்குளம் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், அதன் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம் மற்றும் முசல்குத்திக்குளம் கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு மக்கள் குடியமர்த்தப்பட்டதாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீண்டும் திரும்பி வந்து மீள்குடியேற முயன்றபோது வனவளத்திணைக்களம் தடையூட்டுவதாகவும் தெரிவித்தார். இதற்கு உடனடி தீர்வு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர், குறித்த கிராமங்களில் வாழ்ந்தவர்கள் என 293 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், அவர்களில் பலர் காணி உரிமை தொடர்பான ஆவணங்களையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த காணிகளில் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள், பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள், இடிபாடடைந்த கட்டடங்கள் காணப்படுவதாகவும், இக்காணிகளை விடுவிக்க முடியும் என வனவளத்திணைக்களம் முன்பே தெரிவித்திருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு அவை வர்த்தமானி அறிவிப்பு மூலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த வனவளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரும் குடியேற்ற உத்தியோகத்தரும் இணைந்தே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். எனினும், அவ்வாறு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என்றும், தங்களுக்கு இது தொடர்பாக முன்அறிவிப்பே கிடைக்கவில்லை என்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் மறுத்தார்.
இதனையடுத்து, குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் மற்றும் வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்தது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வனவளத்திணைக்களம் தொடர்பாக கூட்டங்களில் பேசப்படும் விடயங்கள் நடைமுறையில் அமல்படுத்தப்படுவதில்லை எனக் கவலை வெளியிட்டார்.
இதேவேளை, கடந்த கூட்டங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய, வனவளத்திணைக்களத்தின் கீழ் இருந்த 17 குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 24 குளங்கள் தொடர்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 5 குளங்களை விடுவிக்க முடியாது என திணைக்களம் அறிவித்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிகாட்டப்பட்டிருந்தது.

