ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் வாக்டாங் ஜாவோஷ்விலி, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று வியாழக்கிழமை (05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை, குறிப்பாக சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய இரு தரப்பினரும், 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 25 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மை அடைந்துவருவதால், வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கவர்ச்சிகரமான வாய்ப்புகள் உள்ளன என்று சபாநாயகர் குறிப்பிட்டதுடன், இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு ஜோர்ஜிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் விருந்தோம்பல் குறித்து அவர் வலியுறுத்தியதுடன், இலங்கையின் வளமான பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகை அனுபவிப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோர்ஜிய சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜோர்ஜிய தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைத் தெரிவித்ததுடன், இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் உயர்கல்வியைத் தொடருவதற்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – ஜோர்ஜியா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை நிறுவுவதற்கான எதிர்பார்ப்பையும் சபாநாயகர் இதன்போது வெளிப்படுத்தினார்.

