
டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தலைமையில் நடைபெற்ற இந்த திட்டம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.
நிதி அணுகலுக்கான பிரதான தடைகளாக உள்ள அதிக வட்டி வீதங்கள் மற்றும் பிணையில்லாமை ஆகியவற்றுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அதிக வட்டி வீதங்களுக்கான தீர்வாக அரசாங்க அல்லது அபிவிருத்திப் பங்காளிகளின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் மறுநிதியளிப்புக் கடன் திட்டங்களை (Re-financing loans) அறிமுகப்படுத்துதல் மற்றும் வட்டி மானியம் (Interests subsidy loans) வழங்கப்படும் கடன் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டிற்காக 95,686 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கமைய, டித்வா சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக நடவடிக்கைகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்குத் தேவையான தொழிற்படு மூலதனக் கடன்களை (Working capital loans) வழங்கும் பணிகள் கடந்த டிசம்பர் 16 முதல் 3 அரச வங்கிகள் மூலம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் தற்போது இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் 0 சதவீத வட்டியில் வங்கிகளுக்கு நிதி வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி வீதத்தில் 25 மில்லியன் ரூபா வரை கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி 2026ஆம் ஆண்டிற்காக 10,000 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை 5 சதவீத வட்டி வீதத்தில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற முடியும் என்றும், 2026ஆம் ஆண்டில் அதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

