டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்ட மக்களின் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் அதற்குத் தேவையான காணிகளை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்த கலந்துரையாடல், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நேரடியாகத் தலையிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த மீளக் குடியேற்றச் செயல்முறையை மிக விரைவில் நிறைவு செய்வதே ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், இதற்காகத் தேவையான நிதி போதியளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மீளக் குடியேற்றத்தின் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னர் வீடு இருந்த இடத்திலேயே மீளக் குடியமர்த்தக்கூடிய மக்கள் மற்றும் வேறு இடங்களில் குடியேற்றப்பட வேண்டியவர்கள் என அடையாளம் காணும் பணிகள் மாவட்ட ரீதியாக ஆராயப்பட்டன.
கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து (NBRO) அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பகுதிகளில் போதுமான அதிகாரிகள் இல்லையென்றால், NBRO அறிக்கைகளை சமர்ப்பித்து நிறைவு செய்துள்ள மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் உதவியைப் பெற்று ஒரு மாதத்திற்குள் பணிகளை முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த நடவடிக்கைகளுக்கான வாகனங்கள் மற்றும் வசதிகளைப் பெறுவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், NBRO அறிக்கைகளை வழங்கும்போது அதிக ஆபத்துள்ள பிரதேசங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தி, முன்னுரிமையின்படி அந்த நடவடிக்கைகளை விரைவில் முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
NBRO அறிக்கைகள் தொடர்பாக எழுப்பப்படும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடி, முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து, தொடர்புடைய பணிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போதுமான அளவு நிலத்தை விடுவித்த பின்னர் அந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தொடங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
காணியுடன் கூடிய வீடு கொள்வனவு செய்ய விரும்புவோருக்கு காணி கொள்வனவின் போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஜயபூமி போன்ற கொடுப்பனவுப் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவு, 50,000 ரூபா கொடுப்பனவு, மற்றும் 15,000 ரூபா மாணவர் உதவித்தொகை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், சில மாவட்டங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் உள்ள சிக்கல்களை சரிசெய்து துல்லியமான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
கிரிஉல்ல நகரம் நீரில் மூழ்கியதால் சேதமடைந்த வர்த்தக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். பிரதேச சபையின் கீழ் வரிப்பணம் செலுத்தும் அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் 02 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து, இழப்பீடு வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன மற்றும் புவியியலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

