மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ஜெகன் எனும் ஈழத்தமிழர் அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
போர், இடம்பெயர்வு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் துயரம், நீதி மறுப்பு என பல தசாப்தங்களாக சொல்ல முடியாத வேதனைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள், இன்றும் உலகம் முழுவதும் நீதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர். செம்மணி மனிதப் புதைகுழிகள் உள்ளிட்ட உண்மைகள் முழுமையாக வெளிச்சத்திற்கு வர வேண்டும்; சர்வதேச நீதிப் பொறிமுறையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நமது மக்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், தாயகத்தின் துயரிலிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து வாழும் ஈழத்தமிழர்கள் கூட கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.
மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தனித்துணை ஆட்சியரான கலைமன்னன் அவர்கள்அங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், “செருப்பால் அடிப்பேன்” என்று மிரட்டியதாகவும், ஈழத் தமிழரான ஜெகன் என்பவரைக் கன்னத்தில் அறைந்ததாகவும் சமூக ஊடகங்களிலும், செய்தி ஊடகங்களிலும் செய்திக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், அது மனிதக் கண்ணியத்திற்கும் நிர்வாகப் பொறுப்பிற்கும் முற்றிலும் முரணான, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
எனவே
மண்டபம் முகாம் சம்பவம் குறித்து உடனடி, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரியை உடனடியாகப் பணிநீக்கம் செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு, நீதி,நம்பிக்கை மற்றும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலும்,திருச்சி போன்ற சிறப்பு முகாம்களிலும் வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தாய்த் தமிழகம், பாதுகாப்பு தேடி வந்த ஈழத்தமிழர்களுக்கு அச்சத்தையும் அவமரியாதையையும் அல்ல; மனிதநேயத்தையும் கண்ணியத்தையும் வழங்கும் நிலைப்பாட்டை உறுதியாக நிலைநாட்ட வேண்டிய பொறுப்புக் கொண்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
நீதியும் பொறுப்புக்கூறலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ் ஏதிலிகள் பாதுகாப்பு மன்றம்(TRPF) வேண்டுகோள் விடுக்கிறது.
‘நன்றி’
இந்த அறிக்கையை இதிலுள்ள கடிதத் தலைப்பில் பதிவாக்கித் தரவும்

