இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.
பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், ‘குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்’ கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி,
பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒருமுறை தளத்தில் முறைப்பாடளித்தால், ஏனைய அனைத்துத் தளங்களிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒரு முறை நீக்கப்பட்ட படம், மீண்டும் அதே தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றப்படுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க வேண்டும்.
இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மதிக்காத இணையதளங்களை பிரித்தானியாவில் முழுமையாக முடக்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
பிபிசி செய்திச் சேவையில் பேசிய பிரதமர் ஸ்டார்மர்,
“பயங்கரவாதம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகளை நீக்குவதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் காட்டும் அதே வேகத்தை, பெண்களின் அந்தரங்கப் படங்களை நீக்குவதிலும் காட்ட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. இதனைத் தடுக்க நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அந்தரங்கப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 20.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த மே மாதம் வெளியான பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த புதிய சட்டமானது குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாக அமையும் எனப் பெண் உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.

