Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகலரும் பிரயோகிக்கவேண்டும் - சுரேஷ் பிரேமசந்திரன்

மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகலரும் பிரயோகிக்கவேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இவ்விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் ஒன்றிணைந்து பயணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே சுரேஷ் பிரேமசந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது

நாட்டில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏதேனும் ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யுமா என்பது சில காலம் கடந்ததன் பின்னர் தான் தெரியும். ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு மத்தியில் ஒரு கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் உண்டா என்பது பற்றி இங்கு பேசப்பட்டது. இவ்வேளையில் மாகாணசபைத்தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டும் என்பது தமிழர் தரப்பில் மாத்திரமன்றி, சிங்களத்தரப்பினாலும் வலியுறுத்தப்படும் ஒரு விடயமாக இருக்கிறது.

ஆனாலும் அதனை இப்போது நடாத்தாமல் இருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் அரசாங்கம், அதனை இழுத்தடிக்கும் நோக்கில் மாகாணசபைத்தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்குப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களையே மாகாணசபைகளுக்கான நிழல் அமைச்சர்களாக நியமித்து, அக்கட்டமைப்பை செயலிழக்க வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு அழுத்தங்களை வழங்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் உண்டு.

அடுத்ததாக தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தைப் பொறுத்தமட்டில், கடந்த அரசாங்கங்களினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டங்களைத் தமிழ்த்தரப்பான நாம் எதிர்க்கவில்லை. மாறாக அதனைக் கொண்டுவந்தவர்களே அதைக் கிழித்தெறிந்தார்கள். இவ்வேளையில் நாம் ஆக்கபூர்வமானதும் சகலரையும் உள்ளடக்கியதுமான புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்துப் பேசவேண்டியது மிக அவசியமாகும்.

இவ்விடயத்தில் சில தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயகத் தமிழ்த்தேசியக்கூட்டணி என்ற அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படுகின்றன. அதேபோன்று நாம் சில விடயங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியுடன் கூட்டிணைந்து செயற்பட்டுவருகிறோம். எனவே இவ்வாறு ஒற்றுமையுடன் செயற்படும் தரப்புக்களை முதலில் ஊக்கப்படுத்தவேண்டும். அதனைத்தொடர்ந்து ஏனைய தரப்புக்களையும் அந்த ஒற்றுமை முயற்சியில் இணைத்துக்கொள்ள முற்படவேண்டும் என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks