யார் மாவீரர்கள்?? அவர்களின் தியாகம் என்ன??அவர்களின் பெருமை என்ன?? அவர்களின் இறுதிக் கனவு ,இறுதி ஆசைகள் எவை??
தமது மண்ணின் விடுதலைக்காகவும், தமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகவும், தமது இனத்தின் உரிமைகளுக்காகவும் பல நூறு கனவுகளைச் சுமந்து இலட்சிய உறுதி கொண்டு எமது தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலை ஏற்று இரத்தம் சிந்தி,வியர்வை சிந்தி தம்முயிர்களை ஈகம் புரிந்தார்களே, அவர்கள் தான் எமது மாவீரர்கள்.
அந்த உன்னதமான அப்பழுக்கற்ற மாவீரர்களின் கனவுகளைச் சுமந்து உறுதி பிறளாது ஒழுக்கமுடன் எமது இயக்கத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இலட்சிய உறுதியுடன் தலைமையின் வழி நடப்பவர்களே உண்மையான போராளிகள். ஆனால் 2009க்கு பின்னர் ஒழுக்கமற்று இயக்க மரபுகளை மறந்து,இலட்சியங்களைத் துறந்து எமது இனத்தின் விடுதலை, மக்களின் நலன்களை மலினப்படுத்தி, இழிவு செய்து போதைக்கும், புகழுக்கும்,பதவிகளுக்கும், பணத்துக்கும் அடிமைகளாக சுய ஒழுக்கமற்று சுயநலப் புலிகளாய் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம் போராளிகளா?இவர்கள் தங்களைப் போராளிகள் என்று கூறிக் கொள்ள என்ன அருகதை கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான இழி செயலாளர்கள் மாண்டு போன வீரர்களை மாவீரர்கள் என்று அறிவிப்பதற்கு என்ன தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துக்கென்று ஒரு தனித்துவம், தகுதி, சிறப்பு, புகழ், பெருமை அனைத்தும் உண்டு. அவ்வியக்கப் போராளிகள் மரணித்து விட்டால் அவர்களை மாவீரர்களாக உறுதிப்படுத்தி அறிவிக்கத் தகுதியானவர்கள் தூய்மையானவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் இயக்கப் போராளிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள் எல்லாம் இன்று தாங்கள் நினைத்தபடி மாவீரர் பட்டியலை அறிவிப்பதும் மாவீரர்கள் என்று அறிவிப்பதும் அந்த மாவீரர்களை அவமதிக்கும் இழிசெயலாகும்.
கடற்புலிகளென்றும்,புலனாய்வுத்துறை என்றும்,அரசியல் துறை என்றும் தங்களுக்கு தாங்களே பல நூறு அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு தாங்கள் தாங்கள் நினைத்தபடி மாவீரர்களை அறிவிப்பதும் அவர்களுக்கு பதவி நிலைகளை வழங்குவதும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் தமிழீழ மண்ணுக்கும் செய்யும் துரோகமாகும்.
அந்தப் போராளிகளைப் பெற்ற உறவுகள் இன்று குழம்பிப் போய் நிற்கின்றார்கள். ஒரு குழு மாவீரர் என்று அறிவிப்பவர்களை இன்னுமொரு குழு மறுக்கிறது. ஒரு குழு அறிவித்த மாவீரர்களுக்கு இன்னும் ஒரு குழு மாவீரர் வணக்க நிகழ்வு செய்வதைத் தவிர்க்கிறது. ஒரு குழு வழங்கும் பதவி நிலைகளை மற்றொரு குழு மறுதலிக்கிறது.இவ்வாறான நகைப்புக்குரிய செயல்களைச் செய்வதன் ஊடாக சிங்கள தேசத்தின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைத் தவிர வேறு என்னதான் ஆக்கபூர்வமாக நடக்கிறது.
2009க்குப் பின்னரான 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறான விடயங்களைக் கையில் எடுக்கத் திராணியற்றவர்கள் எல்லாம் இன்று ஆளுக்கொரு பக்கமாக முண்டியடித்துக் கொண்டு எதை சாதிக்க துடிக்கிறார்கள். இவர்களின் பின்னணி என்ன இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து எமக்கு கிடைக்கும் பதில் விடுதலைப் போராட்டத்தை மீண்டும் தழைக்க விடாமல் விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் களங்கத்தை விளைவித்துச் சர்வதேச மட்டத்தில் எமது போராட்டத்தின் நியாயப் பாடுகளை இல்லாதொழிப்பதே அன்றி வேறில்லை. அத்துடன் தங்களது பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரோபாயமாகவும் இருப்பதை காணமுடிகிறது.
எப்போதோ இயக்கத்தை விட்டு விலகிச் சென்றவர்கள், தப்பி ஓடியவர்கள், சிங்களப் படைகளுடன் செயல்பட்டவர்கள், இயக்கத்தால் விலக்கப்பட்டவர்கள் எல்லாம் இன்று தங்களை இறுதிவரை போராடிய போராளிகளாகக் கூறிக்கொண்டு எமது இயக்கத்துக்கும் மாவீரர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதை உண்மையான எந்த ஒரு தேசப்பற்றாளர்களாலும் பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறானதொரு சூழலிலேயே பிரான்சில் ஒரு குழுவால் மாவீரர்கள் உறுதிப்படுத்தல் மாவீரர்களை அறிவித்தல் மாவீரர் நிகழ்வுகளைச் செய்தல் என்ற நாடகம் அரங்கேற்றப்பட இருக்கிறது.
அன்பான மக்களே! “இவ்வாறான ஒரு துரோகத்தனத்துக்குத் துணை போகாது இந்நிகழ்வுகளை நீங்கள் தவிர்ப்பதே தமிழினத்துக்கு செய்யும் ஒரு சிறந்த கைங்கரியமாக இருக்கும் என்பதை அறியத் தருகிறோம். இவ்வாறான குழப்பவாதிகளையும் ஏமாற்றுக்காரர்களையும், எமது இனத்துக்கும்,தேசத்துக்கும், மக்களுக்கும், மண்ணுக்குமாய் மாண்டு போன மாவீரர்களுக்கும் துரோகம் புரியும் ஈனர்களையும் இனங்கண்டு அவர்களை விரட்டியடிப்போம். விழிப்போடு இருங்கள்.விடுதலையை வென்றெடுப்போம்.






