Saturday, February 21, 2026
Homeபுலனாய்வுஇலங்கையின் இராஜதந்திர முயற்சிக்கு வெற்றி: 2026 T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்!

இலங்கையின் இராஜதந்திர முயற்சிக்கு வெற்றி: 2026 T20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாடுவதில்லை என ஏற்கனவே எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது. இலங்கையின் விசேட கோரிக்கைக்கு இணங்க, நிலவிய கருத்து வேறுபாடுகளைக் களைந்து குறித்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிமுல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது சேவைக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதற்கு முன்னதாக, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்த போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தச் சாதகமான முடிவை எட்டியுள்ளது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் நிலவிய பல நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் விஜித ஹேரத் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளையும், இலங்கையின் காத்திரமான தலையீட்டையும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

இக்கட்டான சூழலில் இந்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வழங்கிய விரைவான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் தான் பணியாற்றிய காலம் மிகவும் மகிழ்ச்சிகரமானது மற்றும் வெற்றிகரமானது எனத் தெரிவித்த பாஹிமுல் அஸீஸ், தனது பணிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வழங்கிய ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். அத்துடன், தனது பதவிக்காலத்தின் போது 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்தப்பட்ட இரண்டு பிரதான தேர்தல்களும் மிகவும் நீதியான முறையிலும் நேர்த்தியாகவும் அமைந்திருந்தமை குறித்து தனது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அவர் இதன்போது பகிர்ந்துகொண்டார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks