Saturday, February 21, 2026
Homeசர்வதேசம்ஈரான் எம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் - ட்ரம்ப் மிரட்டல்

ஈரான் எம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் – ட்ரம்ப் மிரட்டல்

அணுசக்தி திட்டம் குறித்த ஓர் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுக்க ஈரான் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையெனில், மோசமான விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (19) வொஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய கூட்டத்தில் உரையாற்றியபோதே ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ள, ட்ரம்ப் 10 முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் கொடுத்துள்ளார்.

நாங்கள் ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. ஈரானுடன் ஒப்பந்தம் முன்னெடுப்பது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இப்போது எம்முடன் அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை எனில், மோசமான விளைவுகள் ஏற்படும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இன்னும் 10 – 15 நாட்களுக்குள் இந்த விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானை தாக்குவதற்காக அமெரிக்க இராணுவம் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் சர்வதேச மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு நிலையில், ட்ரம்ப் ஈரானுக்கு இவ்விதமாக நேற்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ட்ரம்பின் அதிரடி மிரட்டல்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என ஈரான் தலைவர் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.

ஓமான் நாடு மத்தியஸ்தம் வகிக்க, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் கூட ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araqchi) வழிகாட்டும் கொள்கைகளுக்கு தாம் உடன்படுவதாகக் கூறியபோதும், சில விடயங்களில் இரு தரப்பும் ஒத்துப்போகாதிருந்ததாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் புதன்கிழமை (18) தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஒரு புறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற, மறுபுறம் ட்ரம்பின் மிரட்டல் சர்வதேசத்தின் கவனத்தை திருப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks