கைது செய்யப்பட்ட பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணித்தியாலங்கள் விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை (19) அதாவது ஆண்ட்ரூவின் 66 ஆவது பிறந்தநாளன்று அதிகாலை 08.00 மணியளவில் நோர்போக்கில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தேம்ஸ் வேலி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
அவர் வர்த்தகத் தூதுவராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளியான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனுக்கு இரகசிய அரசாங்க ஆவணங்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐல்ஷாம் பொலிஸ் நிலையத்தில் வைத்து நாள் முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இரவு 07.00 மணியளவில் அவர் “மேலதிக விசாரணைக்காக” விடுவிக்கப்பட்டார். அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது சகோதரரின் கைது தொடர்பில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ்,
“ஆண்ட்ரூ மீதான இந்தக் குற்றச்சாட்டுச் செய்தியை நான் மிகுந்த கவலையுடன் அறிந்தேன். எமது முழு ஒத்துழைப்பும் அதிகாரிகளுக்கு உண்டு. நான் தெளிவாகக் கூறுகிறேன்: சட்டம் தன் கடமையைச் செய்யும். அதுவரை இது குறித்து நான் மேலதிக கருத்து எதனையும் தெரிவிக்கமாட்டேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நவீன காலத்தில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். 2025-ஆம் ஆண்டில் ஆண்ட்ரூவின் ‘இளவரசர்’ மற்றும் ‘யோர்க் பிரபு’ ஆகிய பட்டங்கள் மன்னரால் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வெறும் ‘ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.
அரச பட்டங்கள் பறிக்கப்பட்டாலும், சட்டப்படி அவர் இன்னும் பிரிட்டன் சிம்மாசனத்திற்கான வாரிசு வரிசையில் 8-வது இடத்தில் நீடிக்கிறார். அவரை இந்த வரிசையில் இருந்து நீக்க வேண்டுமானால் பாராளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்தின் நற்பெயருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

