Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசித்து அதற்காய் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தவர் சி சபாரத்தினம் அவர்கள்.மறைவு செய்தியில்...

தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசித்து அதற்காய் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்தவர் சி சபாரத்தினம் அவர்கள்.மறைவு செய்தியில் சிறிதரன் தெரிவிப்பு.

ஆழ்ந்த அஞ்சலிகள்….!

​தமிழ்த் தேசியத்தை ஆழமாக நேசித்து அதற்காய் தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்த ஓர் மனிதனாக, அமரர் சின்னவன் சபாரத்தினம் அவர்களின் மறைவு பெருவலியைத் தந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்.

​”விழுவது ஒரு மனிதனாக இருக்கலாம்; ஆனால் மறைவது ஒரு வரலாற்றின் பக்கம்” என்பதாக அன்னாரின் வாழ்வியல் தேச நலனையும், தேசியக் கனவையும் நாதமாகக் கொண்ட ஓர் அன்பும், அறமும் உடைய வாழ்வியலைப் போதித்திருக்கிறது.

​வரணி வடக்கின் மைந்தனாக அவரின் சேவைத் தடங்களும், சமூகப் பணிகளும் அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்திருக்கின்றன. மிகக் குறிப்பாக, ஓர் உன்னத கூட்டுறவாளனாகப் பல ஆண்டுகள் பணியாற்றி, சிரேஷ்ட கூட்டுறவுப் பரிசோதகராக மக்களுக்குப் பணிபுரிந்தமையானது என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

​தாயகக் கனவை நெஞ்சினில் சுமந்த ஓர் தேசத் தந்தையாக, இந்த மண்ணையும் மக்களையும் ஆக்கிரமித்து அபகரிக்கத் துடித்த அந்நியருக்கு எதிரான ஈழ விடுதலைப் போரில், தான் ஈன்ற புதல்வனையும் மாவீரனாக இந்த மண்ணுக்கு அர்ப்பணித்த அவரின் அளப்பெரிய தியாகம் நிறைந்த வாழ்வியல் போற்றுதலுக்குரியது.

​”எழுத்து என்பது வெறும் செயலல்ல, அது ஒரு தலைமுறையின் குரல்.” அந்த வகையில் ஓர் தலைமுறையின் கனவைச் சுமந்து, அதன் வீரத்தையும் சோகத்தையும் பிரதிபலிக்கும் காலத்தின் கண்ணாடியாகத் தனது எழுத்திலக்கியப் படைப்பாற்றலை சமூக மாற்றத்திற்காய், அடக்குமுறைக்குட்பட்ட இனம் ஒன்றின் பெரும் குரலாய் துணிச்சலுடன் பயன்படுத்தினார் என்பது போற்றுதலுக்குரியது. மிகக் குறிப்பாக, அவரின் கலை இலக்கியப் பயணம் என்பது “கலாபூசணம்” எனும் அதி உயர் கௌரவத்தைப் பெறும் வரை அர்ப்பணிப்புடன் தொடர்ந்தமை சிறப்பானது.

கலை, இலக்கியம், சமூகம், தேசம் என அத்தனைக்குமாய் தன் வாழ்வியலை இதயசுத்தியுடன் அர்ப்பணித்த மகத்தான எம் மண்ணின் மாபெரும் மனிதனுக்கு, நெஞ்சார்ந்த அஞ்சலிகளையும், பிரிவால் துயருறும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். என தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks