Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில்,

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் பெறாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் முழுப் பாடசாலைக் கட்டமைப்பும் பெற்றோரின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலையின் முழுச் செலவையும் மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்து பெற்றோரிடம் அறவிடும் முறைமையே தற்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பிரபல்யமான பாடசாலைகளில் வர்ணம் பூசுதல் தளபாடங்கள் திருத்தம் செய்தல் போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 3000 முதல் 5000 ரூபா வரை பணம் அறவிடப்படுகிறது.

இவ்வாறான வசூலிப்புகள் பாடசாலை வங்கிக் கணக்குகளில் இடப்படாமல் வகுப்புக் குழுக்கள் என்ற பெயரில் தனிப்பட்ட பெற்றோரின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றன. இதன் மூலம் பாடசாலை நிர்வாகம் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக்கொள்ள முற்படுகிறது.

கல்வி அமைச்சரின் வெற்று வார்த்தைகளால் மட்டும் இதனைத் தடுத்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று ‘ எனது வாய்ச் சொல்லே சுற்றறிக்கை’ என்று கூறாமல் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் . அந்தச் சுற்றறிக்கையை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன் பல முன்னணிப் பாடசாலைகளின் கணக்குகளில் பல கோடி ரூபா பணம் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முறையான கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி என்பது உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நிதிப் பாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks