Sunday, February 22, 2026
Homeவிளையாட்டுமுதலாவது சர்வதேச ரி20 போட்டியில் இலங்கையை DLS  முறைமையில் 11 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் இலங்கையை DLS  முறைமையில் 11 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (30) இரவு நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் 11 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதற்கு அமைய 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

மழையினால் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இப் போட்டி அணிக்கு 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 16.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 24 ஓட்டங்களாக இருந்தபோது காமில் மிஷார (16) ஆட்டம் இழந்தார்.

எனினும் 5.1 ஓவர்களைக் கொண்ட பவர் ப்ளேயில் இலங்கை ஓரு விக்கெட்டை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஆனால் அதன் பின்னர் இலங்கையின் விக்கெட்கள் அடிக்கடி வீழ்ந்தது.

குசல் மெண்டிஸ் 37 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 23 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆதில் ரஷீத் 19 ஓட்டங்களுக்கு 3 விககெட்களையும் சாம் கரன் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெமி ஓவர்ட்டன் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லியாம் டோசன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 15 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. அப்போது இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 9 ஓட்டங்களே தேவைப்பட்டது.

எனினும் அத்துடன் ஆட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிரகாரம் அதன் வெற்றி இலக்கு 15 ஓவர்களில் 114 ஓட்டங்களாக இருந்தது. இதற்கு அமைய 11 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் பில் சோல்ட் 46 ஓட்டங்களையும் டொம் பென்டன் 29 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: ஆதில் ராஷித்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks