அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீன விஜயத்தை நிறைவு செய்து 24 மணித்தியாலங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்அடுத்த வாரம் சீனாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே 19 மற்றும் 20ஆம் திகதிகளில் அமையவுள்ள புட்டினின் இந்த விஜயமானது, 2001ஆம் ஆண்டு சீனா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கையெழுத்திடப்பட்ட ‘சீன-ரஷ்ய நட்பு உடன்படிக்கையின்’ 25ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல் மற்றும் உலகளாவிய வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேசிவிட்டுச் சென்ற சில தினங்களிலேயே புடின் அங்கு செல்லவுள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.Politics
இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் “முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள்” குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆராயவுள்ளனர்.
உக்ரேன் போருக்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா, சீனாவின் வர்த்தகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான கைதிகள் மற்றும் உயிரிழந்த இராணுவத்தினரின் உடல்களை பரிமாறிககொள்ளும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
உக்ரேன் தரப்பு இராணுவத்தினருடையதாகக் கருதப்படும் 528 உடல்களை ரஷ்யா சனிக்கிழமை உக்ரேனிடம் ஒப்படைத்துள்ளது. இந்த உடல்களை அடையாளம் காணும் பணிகளை உக்ரேன் தரப்பு ஆரம்பித்துள்ளது.
இதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் இடையே 205 போர்க் கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுமுள்ளனர். இரு தரப்பிலிருந்தும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் முதற்கட்டமே இதுவென உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
களமுனையில் இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் பரஸ்பரம் தீவிரத் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன.
உக்ரேனின் தென்பகுதி துறைமுக நகரான ஒடெசா மீது ரஷ்யா ஒரே இரவில் 294 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் துறைமுகக் கட்டமைப்பு சேதமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இவற்றுள் 269 ட்ரோன்களை உக்ரேன் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
மறுபுறம், ரஷ்யாவின் மொஸ்கோ உள்ளிட்ட 14 பிராந்தியங்களை இலக்கு வைத்து உக்ரேன் ஏவிய 138 ட்ரோன்களை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. எனினும், எல்லையோரப் பகுதியான பெல்கோரொட்டில் உக்ரேனின் ட்ரோன் தாக்குதலில் இரண்டு ரஷ்ய பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

