Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்அரசியலில் மாற்றம் செய்தது போல புதிய கல்வி சீரமைப்பில் புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம்- பாராளுமன்ற...

அரசியலில் மாற்றம் செய்தது போல புதிய கல்வி சீரமைப்பில் புதிய மாற்றங்களை உருவாக்க இருக்கின்றோம்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிப்பு!

இந்த நாட்டில் புதியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்று, புதிய கல்விச் சீரமைப்பு ஊடாகப் புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். இந்த புதிய கல்விச் சீரமைப்பு தொடர்பாக எதிர்ப்பினைத் தெரிவிப்பவர்களுக்குச் சரியான புரிதல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு உல்லாச விடுதி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) Aaro 360 நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் நடைபெற்ற Aaro 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்;

“எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல ஊழல் மோசடிகள் நிறைந்த நாடாகக் காணப்பட்டது. இப்போது நாங்கள் இந்த ஊழல் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்களை வெகுவாகக் குறைத்து வருகிறோம். ஊழல் மோசடி குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டிருக்கிறது. வெகு விரைவில் இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பம் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கொள்கையாக இருக்கின்றது. எமது அரசாங்கம் ‘டிஜிட்டல் பொருளாதாரம்’ எனும் அமைச்சினை உருவாக்கி, அதனூடாகப் பல நல்ல விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் விசேடமாக Gopay எனும் செயலியை (App) உருவாக்கியுள்ளோம்.

தற்போது வீட்டிலிருந்தவாறே அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தித் தமக்கான சேவைகளைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை எமது அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாது, உங்கள் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழைக்கூட வீட்டிலிருந்தவாறு பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியை நாம் தற்போது ஏற்படுத்தியுள்ளோம். அதையும் தாண்டி தற்போது போக்குவரத்துப் பொலிஸாரின் தண்டப்பணங்களைச் செலுத்துவதற்காகவும் டிஜிட்டல் மயமாக்கலை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எம்மை அண்மித்த இந்தியா போன்ற நாடுகள் புதிய தொழில்நுட்பங்களின் ஊடாகத் தங்களது சேவைகளை விரிவுபடுத்தியிருக்கின்றன. பொருளாதார ரீதியாக அந்த நாடுகள் முன்னேற்றம் காண்பதற்கு அந்தத் தொழில்நுட்பமும் முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது. அதனைப் போன்றே நாங்களும் எமது நாட்டில் இவ்வாறான தொழில்நுட்ப முறைமைகளைக் கையாண்டு, நாட்டை ஒரு வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

இன்று எமது அரசால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற கல்விச் சீர்திருத்தம் தொடர்பான விடயம் ஒரு பேசுபொருளாகியுள்ளது. இந்த நாட்டில் புதியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்றே, கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே எமது அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.

உலகளாவிய ரீதியில் வளர்ச்சிப் பாதையில் நாடுகள் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறை. அந்தத் துறையின் ஊடாகப் பல முன்னேற்றங்களை அந்த நாடுகள் அடைந்துள்ளன. அவ்வாறான நாடுகளின் வளர்ச்சிக்குக் கல்வித்துறைதான் மிக முக்கிய பங்காற்றி வந்துள்ளது. அதைப் போன்றுதான் நாங்களும் இந்த கல்விச் சீரமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் பல கல்விச் சீர்திருத்தங்களை உருவாக்கியிருந்தன. ஆனால் அவை அனைத்தும் இறுதியில் தோல்வியையே தழுவின.

எமது பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கல்விச் சீரமைப்பானது விசேடமாகப் பல நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நவீன முறைமையிலான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய ‘மனப்பாடம் செய்யும்’ முறைமையின் ஊடாக ஒரு பரீட்சையை எழுதிச் சித்தியடைந்து தொழிலுக்குச் செல்லும்போது, அவர்களால் சரியான இலக்கை அடைய முடியாத நிலைமையே காணப்படுகிறது.

ஆனால், இந்த புதிய கல்விச் சீரமைப்பின் ஊடாகப் புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். அவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்து செல்லும்போது ஒரு ‘தொழில் வல்லுநர்களாகச்’ செல்லும் விதமாக இந்தக் கல்விச் சீர்திருத்தம் அமைந்திருக்கின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அதில் இருக்கும் சொற்பதங்களைத் தான் பிழையெனக் கூறுகிறார்களே தவிர, அவர்களுக்குச் சரியான புரிதல் இல்லை என்றே நான் கருதுகின்றேன். எனவே, இந்த நல்லதொரு விடயத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்த புதிய மாற்றத்தினை உருவாக்க முன்வர வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான மு.துதீஸ்வரன், செல்லப்பெருமாள் வனிதா மற்றும் நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks