தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கைகளான, கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, சரியான எண்ணிக்கை அடிப்படையிலான, தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து சமூகத்தினருக்கும், சட்டப்பூர்வமான இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை, சமூக நீதி மற்றும் அரசியல் சமத்துவத்தின் அடிப்படையில் மீண்டும் அமல்படுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையின் தமிழீழ மண்ணில் ஈழத் தமிழர்கள்மீது அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்குப் பொறுப்பான சிங்களப் பௌத்த இனவெறி அரசுக்கு எதிராக, சர்வதேச தரப்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமானப் போர்க்குற்ற விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழீழப் பகுதிகளிலும் உலகின் பல புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே சுதந்திரத் தமிழீழம் தொடர்பான, பொது வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையிலும், சட்டமன்றத்தில் அரசின் சார்பில் வலுவான தீர்மானம் இயற்றப்பட வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணிகள் 100 சதவீதமும், தனியார் துறை வேலைவாய்ப்புகள் 90 சதவீதமும், தமிழர்களுக்கே கிடைத்திட வழி செய்யும் வகையில், உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் ஒன்றிய அரசு அலுவலகப் பணிகளில் 90 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைத்திடும் வகையில், தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து நிறைவேற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை நடத்திடவும், குடமுழுக்கை தமிழில் மட்டுமே நடத்திடவும், உரிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூடி, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் விரும்பும் நாடுகளுக்கு சட்டபூர்வமான மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் எல்லைக்குள் செயல்படும் அனைத்து சுங்கச்சாவடிகளையும் நிரந்தரமாக மூடிட, தமிழ்நாடு அரசு உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, நீண்ட காலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை, விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வட மாநில மக்களின் கட்டுப்பாடற்ற வருகையை ஒழுங்குபடுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள உள் நுழைவு அனுமதிச்சீட்டு (Inner Line Permit) முறையை, தமிழ்நாடு அரசும் உடனடியாகக் கொண்டு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும்.
அன்புடன்
தி. வேல்முருகன்



