ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும் ஆனால் அவன் கொண்ட இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….!
எனது நண்பன் போராளி அன்புமணி அவர்கள் சுகயீனம் காரணமாக சாவடைந்த செய்தி என் இதையத்தை உலுக்கியது.
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம். எங்களுக்கான மொழி கலை கலாச்சாரம் அடையாளம் எமது நாடு. அந்த நாட்டில் வளமான, அமைதியானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாநிலை, அமைதிப்போராட்டங்கள் என்று அமைதிவழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த வல்லாதிக்க கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய 1994 ஆம் ஆண்டு அன்புமணி தன்னை போரட்டத்தில் இணைத்து கொண்டான்.
கெனடி 1 பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்று பின்னர் இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்து பல தாக்குதல்களில் சிறப்பாகச் செயற்பட்டார் அதிலும் விமான எதிர்ப்பு பீரங்கிப்படை பிரிவில் (அப்பாச்சி) சுடுகுழல் இயக்குனராகவும்,குறிப்பாக புலிகளால் பெயர் சூட்டப்பட்ட தாக்குதல்களான ஓயாத அலைகள் முல்லைச்சமர், மற்றும் சத்ஜெய,ஜெயசிக்குறு எதிர்ப்புச்சமர்களில் மிகவும் திறமையாக களமாடிய அன்புமணிக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பல பாராட்டுக்களும் பெற்றார். பின்னர் தலைவர் அவர்களின் நேரடி பணிப்பின் பேரில் காந்தரூபன் அறிவுச்சோலை வழங்கல்கல் பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழர் மீதான உச்சகட்ட இனவழிப்பு யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது அறிவுச் சோலை பிள்ளைகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து வந்தார்.
மே 18 வரை காந்த ரூபன் அறிவுச்சோலை குழந்தைகளுக்கு அன்பான மாமாவாக வாழ்ந்த அன்புமணி மரணம் இதயத்தை கனக்கச் செய்கிறது.
நீ வரித்துக்கொண்ட லட்சியம் நிச்சயம் வெல்லும்
நின்மதியாக உறங்கு நண்பா.
உனது லட்சிய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
போராளி செயல் வீரன்
த.வி.பு. தி 089

