Sunday, April 19, 2026
Homeபிரதான செய்திகள்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் இல்லை. சிறிதரன்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் இல்லை. சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசுவதற்காக கடக்கவேண்டிய பாதை இன்னும் கடினமானது. மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளுங்கள். அப்போதே இனங்களை இணைத்துக்கொள்ளும் கௌரவமான நாட்டை உருவாக்க முடியுமாக இருக்கும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற விளையாட்டில் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் பல்ககலைக்கழக மாணவர்களும் தமிழ் உத்தியோகத்தர்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கின்றனர். குறிப்பாக கடந்த மாதம் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு அலுவலத்தில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களுக்கு தமது சுதந்திரமான செயற்பாடுகளுக்கும்,தமது உரிமைகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதற்கும்இ தமது இனம் சார்ந்த கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்த அரசிலும் அவர்களுக்கு தடைகள் உள்ளது என்பதனையே இந்த செயற்பாடு வெளிப்படுத்துகின்றது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எதிர்காலத்தில் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரமாக தமது கல்வி நடவடிக்கைகளை தொடர வேண்டும். இவர்களுக்கு அரச இராணுவ, பொலிஸ் அடக்குமுறைகள் இருக்கக்கூடாது என்று வலியுறுத்துகின்றேன்.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் நிர்வாக உத்தியோகத்தராக இருக்கின்ற தயாபரன் ஜெயசித்திரா கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலும் அவர் அடிக்கடி பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.Beaches & Islands

அவரை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவத குற்றத் தடுப்பு பிரிவினரும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்துவதானது தங்களில் இயல்பான உரிமைகளை செயற்படுத்த முடியாமல் தடுக்கப்படுகின்றார் என்பதனையே காட்டுகின்றது.

அத்துடன் கடந்த 2ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சியில் ஊர்வணிகன்பற்று என்ற கிராமத்தில் உள்ள காணி அந்த மக்களின் சொந்த காணியாகும். அவர்கள் பரம்பரையாக ஆண்டுவந்த காணியாகும். அந்த காணியில் முத்துமாரியம்மன் ஆலயம்இ சிறுவர் முன்பள்ளி என்பன இருக்கின்றன. இந்த மக்கள் 1990இல் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீண்டும் அந்த மக்கள் அங்கு குடியேறினர். பின்னர் 2006இல் மீண்டும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில் அந்த இடத்தை பிடித்துள்ள இராணுவத்தின் பொறியியல் இயந்திர பிரிவினர் அங்கு 30 ஏக்கர் காணியை தங்களுக்கு தர வேண்டும் என்று சட்டவிரோதமாக அளவிட்டு எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். நில அளவை திணைக்களம் அந்த காணியை அளந்து இராணுவத்திற்கு வழங்க முயற்சித்த போதும் மக்கள் அங்கு சென்று அதனை முறியடித்தனர். மக்களின் சொந்த காணிகளை வலுக்கட்டாயமாக யுத்தமில்லாத நாட்டில் பரித்துக்கொடுக்க ஏன் அரசாங்கம் முயற்சிக்கின்றது. சொந்த காணிகளை தமது கண்களுக்கு முன்னாலேயே இராணுவஇ பொலிஸ் பிரசன்னத்துடன் அளக்க முயற்சிப்பது ஏன்?

இந்த மக்களின் துயரங்கள் மிகவும் முக்கியமானது. ஏன் இந்த நாடு இன்னும் உருப்படாமல் இருக்கின்றது. கர்ம வினைகள் ஒருபோதும் உங்களை உருப்பட விடாது. கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலைவர்கள் விட்ட தவறுகள், தமிழ் மக்கள் மீது புரிந்த யுத்தங்கள், இன்றும் தொடர்ந்து அந்த மக்களை தெருக்களீல் வைத்துக்கொண்டு அவர்களின் காணிகளை விடமால் பறிக்க முயற்சிப்பது மிகவும் கொடூரமானது. இந்த மக்களின் உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் சமவுரிமைகள் என்று கூறுகின்றீர்கள். ஆனால் மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நல்லெண்ணங்களை பிரதிபலிக்கத் தவிறினால் இப்போது நிலவும் பிரச்சினைகள் இன்னும் நீடிக்கும்.

இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சினையை, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசுவதற்காக கடக்க வேண்டிய பாதை இன்னும் கடினமாது. இதற்காக பாதையை திறவுங்கள். மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளுங்கள். அப்போதே இனங்களை இணைத்துக்கொள்ளும் கௌரவமான நாட்டை உருவாக்க முடியுமாக இருக்கும் என்றார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks