Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக தவறியுள்ளது ; எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக தவறியுள்ளது ; எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம்

நாட்டின் தேசிய பாதுகாப்பைச் சில வாரங்களில் உறுதிப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இன்று பாதாள உலகக் குழுக்களின் கொலைக் கலாச்சாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெரலிஹெல கிராமத்தில் சனிக்கிழமை (14) விவசாயிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் வீதியில் வைத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், இன்று நாட்டில் சாதாரண மக்கள் வீதியில் நடமாட முடியாத அச்சம் நிலவுவதாகக் குறிப்பிட்டார். ‘தேசிய

பாதுகாப்பு குறித்து வகுப்புகளை நடத்துவோம் என்று மேடைகளில் முழங்கியவர்கள், இன்று நாட்டில் நிலவும் பாரதூரமான கொலைக் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிவிட்டனர்.

இன்று நாட்டில் வாழ்வதற்கான சுதந்திரம் பறிக்கப்பட்டு, ஆளும் தரப்பினர் பொய் சொல்வதற்கான சுதந்திரம் மட்டுமே எஞ்சியுள்ளது என அவர் சாடினார்.

பாதுகாப்பு மட்டுமன்றி, பொருளாதார ரீதியாகவும் மக்கள் ஏமாற்றப்படுவதாகத் தெரிவித்த அவர், முறையற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் விவசாயக் கொள்கைகளால் நாடு பின்னடைவைச் சந்தித்துள்ளதைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இலங்கைக்கு வந்த 5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவை என்பதால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் முழுமையான மின் உற்பத்தியைச் செய்ய முடியாமல் போயுள்ளது. இது தொடர்பாகத் தான் எழுப்பிய கேள்விகளுக்குத் துறைசார் அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

அறுவடைக்காலம் நெருங்கியும் நெல்லுக்கு 120 ரூபா கூடக் கிடைக்காது என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளதோடு, ஸ்மார்ட் விவசாயத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

பொய்களையும் ஏமாற்றுக்களையும் மூலதனமாகக் கொண்டு இந்த அரசாங்கம் செயற்படுவதாகவும், விரைவில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பான மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த நாட்டை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks