மற்றொரு ஈரானிய கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை – அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனவும், அது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற அமர்வில் இதனை அவர் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், “கொழும்பு துறைமுகத்திற்கு மிக அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பல் இருப்பதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. காலி கடற்பரப்பில் நடந்த தாக்குதல் போன்று இதுவும் ஆபத்தான ஒன்றாக அமையக்கூடும். இது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். எனவே, இது குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “எதிர்க்கட்சித் தலைவரிடம் உள்ள தகவல்களை விட மேலதிகமான மற்றும் துல்லியமான தகவல்கள் அரசாங்கத்திடம் உள்ளன. குறித்த இரண்டாவது கப்பல் தற்போது இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை. அது நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகிலேயே காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

