Tuesday, April 14, 2026
Homeபிரதான செய்திகள்யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி: விசாரணை ஒத்திவைப்பு

யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி: விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்று மாணவர்களை, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த 16.03.2026 அன்று விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், குறித்த கட்டளை நேற்றுமுன்தினம் (16.03.2026) பல்கலைக்கழக பதிவாளரது கைகளுக்கு கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் பதிவாளர் நேற்று(17.03.2026) மாணவர்களுக்கு குறித்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

தாமதமாக அழைப்பு கட்டளை கிடைக்கப்பெற்ற நிலையில், மாணவர்களால் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியவில்லை. இருப்பினும் பெயர் குறித்த மாணவர்களை, அவர்களுக்கு வசதியாக உள்ள ஒரு நேரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்குமாறு பொலிஸார் கூறியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும் என்ற முனைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அரசியல் கட்சிகள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து பல போராட்டங்கள், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை அது கைகூடவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த சுதந்திர தினமானது தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரை ஒரு உண்மையான சுதந்திரமாக கருதப்படவில்லை. அது கறுப்பு தினமாகவே கருதப்படுகிறது.

இதனை வெளிப்படுத்தும் நோக்கிலேயே மாணவர்கள் குறித்த கறுப்பு கொடியினை சுதந்திர தினத்தன்று பறக்கவிட்டனர்.

இருப்பினும் இறக்கப்பட்ட இலங்கையின் தேசிய கொடியானது எந்தவிதமான சேதாரமோ அல்லது அவமதிப்போ செய்யப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks