ரி20 உலகக் கிண்ணத்துக்கான அமெரிக்க குழாத்தில் ஷெஹான் ஜயசூரிய; தலைமைப் பயிற்றுநர் புபுது தசநாயக்க
இலங்கையிலும் இந்தியாவிலும் கூட்டாக நடைபெறவுள்ள 10ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்துக்கான ஐக்கிய அமெரிக்க குழாத்தில் இலங்கையின் முன்னாள் வீரர் ஷெஹான் ஜயசூரிய இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் விக்கெட் காப்பாளர் புபுது தசநாயக்க செயற்படுகிறார்.
ஐக்கிய அமெரிக்கா தனது ரி20 குழாத்தை வெள்ளிக்கிழமை (30) உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.
ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணத்தில் அறிமுகமான அமெரிக்கா, இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்கிறது.
கடந்த அத்தியாயத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஏ குழுவுக்கான முதல் சுற்று போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றதன் மூலம் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் அமெரிக்கா இடம்பிடித்ததுடன் சுப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி வரலாறு படைத்தது.
அந்த வரலாற்றுச் சாதனையை மீண்டும் நிலைநாட்டவும் உலகக் கிரிக்கெட் அரங்கில் தங்கள் முத்திரையை பதிக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவுள்ளது.
அந்த வரலாற்றுச் சாதனையை மீண்டும் நிலைநாட்டவும் உலகக் கிரிக்கெட் அரங்கில் தங்கள் முத்திரையை பதிக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவுள்ளது.
இம்முறையும் ஏ குழுவில் இடம்பெறும் அமெரிக்கா, இரண்டாவது முறையாக பாகிஸ்தானை எதிர்த்தாடவுள்ளது. இந்த இரண்டு அணிகளுடன் நடப்பு சம்பியன் இந்தியா, நமிபியா, நெதர்லாந்து ஆகியனவும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய அமெரிக்க அணி தொடர்பாக கருத்து வெளியிட்ட தலைமைப் பயிற்றுநர் புபுது தசநாயக்க,
‘இலங்கையில் எமது அணி ஈடுபட்ட பயிற்சிகள் அவர்களை சிறந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு இலக்கையும் அடைந்தோம். அது வீரர்களின் அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த சான்றாகும். எமது உலகக் கிண்ண அணி பலம் வாய்ந்தது என்பதுடன் சமநிலை கொண்டதாகும். ஒவ்வொரு துறையிலும் (மூன்று துறைகளிலும்) ஆதிக்கம் செலுத்த தயாராக இருக்கிறது. மும்பைக்கு செல்வதற்கு முன்னர் தேவையான விடயங்களை சரிசெய்துகொள்வோம். எமது அணியின் திறமையில் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்றார்.

