வங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : மாதா பிதா ஃபிலிம் ஃபேக்டரி
நடிகர்கள் : குகன் சக்கரவர்த்தியார், வாசு விக்ரம், பொன்னம்பலம், வையாபுரி, அலினா ஷேக் மற்றும் பலர்.
இயக்கம் : குகன் சக்கரவர்த்தியார்
மதிப்பீடு: 2/5
கதை, திரைக்கதை ,வசனம், இயக்கம் என ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான அனைத்து பிரிவின் பணிகளையும் தன் தோளில் சுமந்து, அறிமுக நடிகர் குகன் சக்கரவர்த்தியார் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வங்காள விரிகுடா’. இத்திரைப்படம் ரசிகர்களுக்கு எந்த விடயத்தை பகிர்ந்து கொண்டது என்பதை குறித்து தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் தென்பகுதியில் ‘அண்ணாச்சி ‘என்ற அடைமொழியுடன் மக்கள் செல்வாக்குடன் வலம் வருகிறார் கதையின் நாயகன்( குகன் சக்கரவர்த்தியார்) . மக்கள் செல்வாக்கு இருந்தாலும் இவருடைய சொந்த வாழ்க்கையில் பகிர்ந்து கொள்ள இயலாத துயரம் நடைபெறுகிறது.
இதனால் உளவியல் ரீதியாக சோர்வடைந்த கதையின் நாயகன்.. சுய பரிசோதனை செய்து கொள்வதற்காகவும், தன்னை மீட்டெடுப்பதற்காகவும் கடற்கரையில் தனிமையாக இருக்கும் போது.. அவருடைய முன்னாள் காதலி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார்.
கதையின் நாயகன் அவரைக் காப்பாற்றுவதற்காக கதையின் நாயகன் எடுத்த முயற்சியில் தவறு நேர்கிறது. அது என்ன தவறு? அதிலிருந்து அவர் விடுபட்டாரா? இல்லையா? அவருடைய சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரச் சம்பவம் என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
கதையின் நாயகனான குகன் சக்கரவர்த்தியார் திரையில் தோன்றும் போது ரசிகர்களுக்கு புதுமுக நடிகர் என்ற எண்ணம் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு அவர் திரையை ஆக்கிரமிக்கிறார். இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றி. அதற்காக படம் முழுவதும் அவர் மட்டுமே அதிக அளவில் திரையில் தோன்றுவது…!? அத்துடன் படத்தின் திரைக்கதை வெவ்வேறு வகைமைகளில் பயணிப்பதால்… பார்வையாளர்களுக்கு குழப்பமும், சோர்வும் ஏற்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், இளைஞர்களின் இலட்சிய தலைவருமான அப்துல் கலாம் தொடர்பான காட்சிகள்.. பிரச்சார பாணியில் அமைந்திருக்கிறது. இது ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே பிடிக்கும்.
‘வங்காள விரிகுடா’ என்ற பெயரை .. ‘திராவிட கடற்கரை’ என மாற்றுமாறு இயக்குநர் முன் வைத்திருக்கும் கோரிக்கை.. அரசியல் மீது குறிப்பாக தமிழக அரசியல் மீது அவர் வைத்திருக்கும் பற்று.. பட்டவர்த்தனமாக வெளியாகிறது.
கதையின் நாயகியாக நடித்திருப்பவர்கள் தொடங்கி.. பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் என மூத்த கலைஞர்கள் வரை.. இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்கள்.
வங்காள விரிகுடா – ஒப்புக்கொள்ளாத உப்புக்காற்று.

