வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 175க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் பெப்ரவரி 20 ஆம் திகதி பத்திரிகையாளர்களுக்கான சுமுக ஊடக வலையமைப்பு ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தியது.
இலங்கையின் தேசிய முன்னுரிமைகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான அமைச்சின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டி அங்கீகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் “வளமான தேசம் – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் தொலைநோக்கு செயற்பாடுகளை வலியுறுத்தினார்.
வெளிப்படையான பொது தொடர்பும் பொறுப்பான ஊடக செயற்பாடுகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் உலகளாவிய நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அந்த ஆண்டில் 2.36 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன், சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் வருவாய் 7.8 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் பணம் அனுப்புதல் வருமானம் இணைந்து சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாட்டிற்கு பெற்றுத்தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சர்வதேச பிம்பத்தை வலுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் என குறிப்பிட்ட அமைச்சர், துல்லியமான மற்றும் நேர்மையான செய்தி அறிக்கையிடலின் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்க ஊடகங்கள் உதவுகின்றன என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் புத்தாக்கத் துறைகளில் இலங்கையின் திறனை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இலங்கை எக்ஸ்போ 2026 நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை இணைக்கும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் வலைத்தளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் அமைச்சின் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, பிரதமரின் ஊடகப் பிரிவு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

