Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பினரால் யாழில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின...

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பினரால் யாழில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்கான அமைப்பின் வடகிழக்குக்கான பணிப்பாளர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் மகளிர் தினக் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் மங்கள விளக்கினை பிரபல ஈழத்து பெண் பாடகியும் நடிகையுமான பார்வதி சிவபாதம் அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து மேலும் பலர் கௌரவிக்கப்பட்டு ,சாதனை யாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

மேலும், பெண்கள்,சிறுவர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுவது மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த நிகழ்வில் திருமதி வாசுகி சுதாகரன் சிறப்புரை நிகழ்த்தும் போது :இன்று உலகளாவிய ரீதியில் பெண்கள், சிறுவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான நலன்கள் கேள்விக்குள்ளாகி வருகின்றது. பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள், வன்கொடுமைகள் அதிகரித்துள்ளமையானது கவலை அளிக்கிறது. என்னதான் நாகரீக உலகமாக மாறிவிட்ட போதிலும் பெண்கள் மீதான சிந்தனைகள் மாற்றம் கண்டுவிடவில்லை.பெண்கள்,சிறுவர்கள் பொருளாதாரச் சுரண்டல், உழைப்புச் சுரண்டல்களுக்கும், பாலியல் சுரண்டல்களுக்கும் ஆட்பட்டு வருகிறார்கள்.
ஈழத்தில் பெண்கள் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது. ஒரு சமூகத்தை அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்காகப் பெண்களையும், சிறுவர்களையும் இலக்கு வைக்கும் போக்கு அச்சத்துக்குரியது. கண்டனத்துக்குரியது.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத் தீவில் சிங்களப் பெண் “மன்னம்பேரி” தொட்டு ஈழப் பெண்கள் “கிருசாந்தி,இசைப்பிரியா”போன்ற பல்லாயிரம் பெண்கள் வரை சிங்கள அரச இயந்திரத்தால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொன்று எரிக்கப்பட்டமையை யாரும் மறந்து விட முடியாது. இதற்கான சர்வதேச நீதி மறுக்கப்பட்டு மறைக்கப்படுவது ஒரு சிறு உதாரணமே மட்டுமே,அதுபோல் மன்னார் வங்காலையில் கொடூரமாகக் கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்ட சிறுவர்கள் தொடக்கம் 13 வயதேயான சிறுவன் “பாலச்சந்திரனின்” படுகொலை வரை பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சிங்கள அரச படைகளாலும் அதன் துணைக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதற்கான சர்வதேச நீதியும் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழின அழிப்பு போர் முடிந்து 16 வருடங்கள் ஆகியும் இன்றும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையையே உணர்கின்றார்கள். 1983 க்கு முன்னரும் அதன் பின்னரும் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் பெண்கள் உடல் ரீதியாக, உளரீதியாகச் சிதைக்கப்பட்டார்கள். தமிழ்ப் பெண்கள் திட்டமிட்டுக் கருக்கலைப்புச் செய்யப்பட்டார்கள் . கருத்தடை செய்யப்பட்டார்கள் என்று பல ஆதாரங்கள் செய்திகளுடாக வெளிவந்தமை யாவரும் அறிந்ததே . இது பெண்கள் மீதான மற்றும் சிசுக்கள் மீதான அதியுச்ச கொடுமையின் உதாரணங்கள்.இது ஒரு பெரும் இனப்படுகொலை என்பதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஈழத்தில் சிங்களப் படைகளாலும் அதன் துணைக் குழுக்களாலும், மற்றும் இந்தியப் படைகளாலும் அதன் துணைக் குழுக்களாலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்காளாக்கப்பட்டார்கள். தமது கணவன் பிள்ளைகள் குடும்பத்தைக் காப்பாற்றப் பாலியல் லஞ்சம் கேட்கப்பட்டார்கள். பல பெண்கள் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். சிறுவர்கள் கிழித்தறியப்பட்டார்கள்.

           வடக்குக் கிழக்கில் இன்று 89000 மேல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளார்கள். அவர்கள் வறுமை, கடன் சுமை, பாதுகாப்பின்மை போன்ற இன்னோரன்ன துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் பல வகையிலும் சுரண்டல்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள், அவர்களது பிள்ளைகள் சிறுவர்கள் மனநலம் குன்றியவர்களாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இதனால் எமது தமிழ்ச் சமூகம் ஆரோக்கியமற்ற சமூகமாக மாறி வருவதோடு வன்முறைச் சிந்தனையாளர்களாக வளர்வது வருந்தத்தக்கது.
              போரால் பாதிப்படைந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களிலும், ஏனைய பெரும்பாலான குடும்பங்களிலும் பொருளாதாரப் பாதிப்பு நிலவுவதால் சமூக உணவுப் பாதுகாப்புக் கேள்விக்குறியாகி உள்ளது. 2024 தொடக்கம் 2028 வரையான பாலின மற்றும் பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் தேசிய செயல் திட்டத்தை இலங்கை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இது எழுத்தாக மட்டுமே உள்ளது. இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
                         இன்று வடக்கு -கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் மற்றும் வன்முறைக் கலாச்சாரம் பரப்பப்பட்டுத் தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அதற்குள் வீழ்த்தப்பட்டு  அடிமையாக்கப்படுகிறார்கள். இதனால் பெண்கள் சிறுவர்கள் வீதியில் நடமாடுவதற்கே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதனால் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதோடு அச்சத்தோடு நடமாடுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனால் எமது இனம் ஒரு நலிவடைந்த இனமாக, நலிவடைந்த சமூகமாக மாறி வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது.

எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள்,சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரும் எமது இனத்தின்,எமது சமூகத்தின் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாகத் தெரியவில்லை. தேர்தல் காலங்களிலும், தமது அரசியல் கேள்விக்குறியாகும் காலங்களிலும் மட்டுமே வாய்ப் பேச்சு அரசியலைச் செய்துவிட்டு ஓய்ந்து விடுகிறார்கள். இன நலனில், சமூக நலனில் அக்கறை கொண்டு இவர்கள் செயற்படாது தமது சுய லாபங்களுக்காக மட்டுமே பேசி வருவது விசனத்தை ஏற்படுத்துகிறது.இதனாலேயே உண்மையான செயற்பாட்டாளர்கள் பலர் அரசியல் கட்சிகளினின்றும் விலகி எமது மக்களுக்காக காத்திரமாகச் செயலாற்றி வருகிறார்கள் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்

                 பெண்ணுரிமை, சிறுவர் உரிமை,பெண்கள் அபிவிருத்தி,சிறுவர் மேம்பாடு என்று வார்த்தைக்கு வார்த்தை பேசிக்கொண்டு இவற்றையெல்லாம் காலில் போட்டு மிதித்து வரும் அனைத்து செயற்பாடுகளுக்கு எதிராகவும் திரண்டு எழுவோம். பெண்கள்,மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைகள்,அதனுடன் அங்கம் வகிக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றும் செயல் திட்டங்களூடாக எமது பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் செயலாற்றி ஒரு ஆரோக்கியமான, ஒழுக்கமுள்ள, கலாச்சார விழுமியங்கள் நிறைந்த சமூகத்தைக் கட்டி எழுப்ப அனைவரையும் கரம் கோர்க்க அழைக்கிறோம்.

சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழின அழிப்பிற்குப் அச்சமடைந்து ஈழத்தமிழ் உறவுகள் பலர் தமது குழந்தைகள் சிறுவர்கள் பெண்களுடன் தமது உயிர்ப் பாதுகாப்புக்காகப் பலநாடுகளுக்கும் புலம் பெயர்ந்ததுபோல் இந்தியாவுக்கும் அகதிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்.

இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலெல்லாம் அவர்கள் அகதி அந்தஸ்துப் பெற்று,அவர்களுக்கு அந்தந்தநாடுகளில் குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது.ஆனால் நாம் தொப்புள்கொடி உறவென்று சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டில் எமது மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.பெண்கள் ,சிறுவர்கள் வாழ்வுரிமையற்று,கல்வியுரிமையற்று பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாய் ஏதிலிகளாய் வாழ்ந்து வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.இதனை இவ்விடத்தில் எமது அமைப்பு இந்திய அரசுக்கும்,தமிழ்நாடு மாநில அரசுக்கும் வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது.

   இன்று எமது அமைப்போடு ஒன்றித்துக் கரம் கோர்த்துப் பலவழிகளிலும் எமக்கு ஒத்தாசை, உதவிகள் புரிந்து வரும் தாயகம்,மற்றும் எமது புலம்பெயர்வாழ் உறவுகள் அனைவரையும் உரிமையோடு கரம்பற்றி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks