ஈழத் தீவின் மனித புதைகுழிகளும் சிங்கள அரசின் இருட்டடிப்புகளும்,இலங்கைக்கு முண்டு கொடுக்கும் சர்வதேச சமூகமும்.!
ஈழத் தீவில் பல தசாப்தங்களாகப் புரையோடிப் போயுள்ள சிங்கள- பௌத்த பேரினவாத சிந்தனைகளும் இன முரண்பாடுகளும் இன்னும் மாற்றம் கண்டுவிடாது தொடர்கிறது. இன்றும் சிங்கள ஆக்கிரமிப்புகள்,அடக்குமுறைகள், தமிழர் புறக்கணிப்புகள், சிங்களப் படைகளின் ஆதிக்கம், கட்டுப்பாடுகள் தளர்ந்தபாடில்லை.
பல்லாயிரம் தமிழர்கள் சிங்கள பேரினவாத அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட போதும் அதற்கான சர்வதேச விசாரணைகளோ,பரிகார நீதியோ அல்லது பரஸ்பர நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் பொறிமுறைகளோ ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் சிங்கள ஆட்சியாளர்களின் சிந்தனைகளில் எந்த ஒரு மாற்றங்களும் நிகழ்ந்து விடவும் இல்லை. தமிழர்கள் என்றால் அவர்களைக் கொடிய விலங்குகள் போல் நடத்தும் மாற்றான் தாய் மனவியல் மாற்றம் கண்டு விடவும் இல்லை . சர்வதேச நாடுகளும் கண்மூடி வாய் புத்தி வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இவ்வாறு இருக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கும் இடையில் பலத்த நம்பிக்கையீ னங்கள்,அச்சங்கள், வெறுப்புணர்வுகள் ஊறிப் போய் இருக்கும் நிலையில் உள்நாட்டுக்குள்ளேயே விசாரணைகள் பரிகாரநீதிகள்,உரிமைகள் கிடைக்கும் என்று எவ்வாறு நம்ப முடியும்? எம்மை அழித்தவனிடமே நீதியைப் பெற முடியுமா?
ஆயுதப் போர் மௌனித்துப் 17 வருடங்களைக் கடந்தும் இத்தனை பெரிய இழப்புகளைச் சந்தித்து, சொல்லொணாத் துயர்களை அனுபவித்து விடுதலைக்காகப் போரிட்ட ஒரு இனத்துக்குச் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வுகள் என்ன? தமிழர் தரப்புகளுடன் பேசி எட்டப்பட்ட முடிவுகள் ஏதாவது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? எதுவுமே நடக்கவில்லை. தனிநபர் காணிப் பிரச்சினைகள் போன்றும், தனிநபர் எல்லைப் பிரச்சினைகள் போன்றும், தனிநபர் உணவு ப் பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றும் கையாள நினைப்பதும் தீர்வுகளைத் தட்டி கழிப்பதும் இன்றும் தொடர்கிறது. சர்வதேசத்தின் கண்களை மூடிவிட்டுத் தமிழர்களைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
2009க்குப் பின்னரான 17வருடங்களில் இனப்படுகொலை நடந்ததற்கான பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றும் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உயிர்ச் சாட்சியங்களாய் இருந்தவர்கள் பலர் இறந்துவிட்டார்கள். பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். பௌதிகத் தடயங்களும் நீண்ட காலங்களானதால் காலநிலை மாற்றங்கள், இரசாயன மாற்றங்கள் பௌதிக மாற்றங்களால் அழிவடைந்து போய்க் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் கால நீட்டிப்புக்களே அன்றி வேறு இல்லை.
இலங்கைத் தீவில் இருபதுக்கும் மேற்பட்ட மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் எவற்றுக்கும் இதுவரை தீர்வுகளோ நீதியோ வழங்கப்படவில்லை. இன்னமும் பல மனிதப் புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாகவும் தகவல்கள் உண்டு. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலும், இலங்கை முழுவதும் இனப் பிரச்சனைக் காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், முதியோர், மாணவர்கள் உள்ளிட்ட பல தமிழர்களின் நிலை இன்று வரை தெரியவில்லை. இலங்கை அரசினாலும் இதற்கான சரியான பதிலளிக்கப்படாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அகழ்ந்த தெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தடயங்கள் சான்று பொருட்கள் பெரும்பாலானவை காணாமல் ஆக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களுடையவை என்பதை அப்பட்டமாக காட்டி நிற்கின்றன. ஆனால் ஸ்ரீலங்கா அரசோ, சர்வதேசமோ இதுவரை காத்திரமான நடவடிக்கைகளை விசாரணைகளை முன்னெடுக்காது இழுத்தடித்து காலவிரயம் செய்வதன் நோக்கம் தான் என்ன? உள்ளகப் பொறிமுறை, சர்வதேசப் பொறிமுறை என்று மக்களைக் குழப்புவதன் நோக்கம் என்ன?இதற்குச் சர்வதேச கண்காணிப்புகளை கொண்ட சர்வதேசப் பொறிமுறையேஅன்றி வேறு எதுவும் தீர்வாக அமையப்போவதில்லை.
மன்னாரில் 2014 பிப்ரவரி 24 வரை ஒரு பாரிய மனிதப் புதைகுழி தோண்டப்பட்டது. கடந்த காலங்களில் பல தடயங்களும் ஆவணங்களும் சிங்கள அரசால் அழிக்கப்பட்ட நிலையில் அதே சிங்களஅரச கண்காணிப்பிலேயே இந்தப் புதைக்குழி அகழ்வும் நடந்தது. 58 மனித எலும்புக்கூடுகளும் தடயப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் கொல்லப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டமையை முன்னாள் வடமாகாண அமைச்சரான டெனீஸ்வரன் அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால் அவை ஆய்வுக்காக அனுப்பப்பட்டு இறுதியில் நடந்த சம்பவங்கள் தடயங்கள் மாற்றப்பட்டு அவை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சாதாரணமான எலும்புக்கூடுகள் என்று முடித்து மூடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இது தொடர்பாக எந்த ஒரு தமிழ் அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல் கட்சிகளோ அன்றி மனித உரிமைகள் ஆர்வலர்களோ எந்த ஒரு கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்காமல் அழுத்தங்களை பிரயோகிக்காது இருப்பது வேதனைக்குரியது.
மன்னாரில் திருக்கேதீச்சரம் பகுதியில் சத்தோச வளாகத்தில் ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.2013, 2018 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வாய்வும் சர்வதேச கண்காணிப்புகள் ஏதுமற்ற நிலையில் சிங்கள அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 346 எலும்புக்கூடுகளும் மற்றும் தடயப் பொருட்களும் மீட்கப்பட்டன. இதில் சிறுவர்கள் பெண்கள் என்று பலருடைய எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளும் தடயப் பொருட்களும் அமெரிக்க ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டு ஆண்டுகள் பழமையானவை என்றும் சிங்கள அரசு இருட்டடிப்பு செய்ய முயன்றது. ஆனால் ஆய்வகமோ இப் புதைகுழிப் பகுதி பல நூற்றாண்டுகள் பழமையானது என்றும் எலும்புக்கூடுகள் தடயப் பொருட்கள் 1980 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதிக்கு உட்பட்டவை என்று நழுவலாக பதில் கூறியுள்ளது. ஆனால் இவையும் சிங்கள அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடற்பாகங்களும்,தடயப் பொருட்களும் தான் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இந்தப் பகுதி குறிப்பிட்ட காலப்பகுதியில் சிங்கள அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவமும் உள்நாட்டுக் கண்காணிப்புப் பொறிமுறையின் நம்பகத் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு சர்வதேச கண்காணிப்பின் முக்கியத்துவத்தைச் சர்வதேசத்திற்குப் புட்டுக்காட்டியுள்ளது.
இதுபோல் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளிலும் இலங்கையிலுமாக இருபதுக்கு மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுத் தோண்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு,கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற தமிழர் பூமியில் ஸ்ரீலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு இருந்த பகுதிகளிலேயே மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டு மனித எலும்புக்கூடுகள் தடயப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய நிலை என்ன?இவை சரியான முறையில் கண்காணிக்கப்படுகின்றனவா? பாதுகாக்கப்படுகின்றன?விசாரணைகள் நடத்தப்படுகின்றனவா? என்பது பற்றி எல்லாம் தமிழ் அரசியல் தலைவர்களோ அன்றி,மனித உரிமை ஆர்வலர்களோ கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை. இதற்காகக் குரல் கொடுப்பதும் ஓய்ந்து விட்டது.
மேலும் ஏனைய மனிதப் புதை குழிகள் தொடர்பான தகவல்களும், செம்மணி மனிதப் புதைகுழி அவலம் தொடர்பான தகவல்களும் அடுத்து வரும் பாகம் 2 கட்டுரைகளில் தொடரும்..
பாகம் ( 1 )

