பலசாலிகளை விட பலவீனர்களுக்கு உதவுவதே முக்கியம் என நம்புவதாக ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபகரும் ஓய்வுநிலை அதிபருமான சந்த்ரா ஷாவ்டர் தெரிவித்தார்.
இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு மற்றும் அனுசரணை வழங்கல் நிகழ்வு கொழும்பு தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக்ஸ் கழக கேட்போர்கூடத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே தமிழ் யூனியின், வர்த்தக கிரிக்கெட், தேசிய கிரிக்கெட் ஆகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய சந்த்ரா ஷாவ்டர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பில் இயங்கும் புனித சூசையப்பர், புனித பேதுருவானவர், றோயல், பரி. தோமையார் ஆகிய பலசாலி கல்லுரிகளை விட பலவீனர்களாக (கிரிக்கெட்டில்) இருக்கும் இந்தப் பாடசாலைகளே (யாழ். இந்து, இந்து கொழும்பு) அனுசரணை பெற தகுதியானவை என்றார் சந்த்ரா ஷாவ்டர்.
இந்த அடிப்படையில் இந்துக்களின் சமருக்கு ஜனசக்தி லைவ் அனுசரணை வழங்குகிறது.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ். இந்து கல்லூரிக்கும் இந்து கல்லூரி கொழும்புக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர், கொழும்பு பி சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியானது மாணவர்கள், பழைய மாணவர்கள், பல தலைமுறையினரை ஒன்றிணைத்து ஐக்கிய உணர்வை கட்டியெழுப்பும் ஓர் அற்புத நிகழ்வாக திகழ்கிறது.
இது வெறுமனே ஒரு போட்டி அல்லாமல் பகிரப்பட்ட பாரம்பரியங்கள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, நிலைத்திருக்கும் பாடசாலை கிரிக்கெட்டின் உற்சாகம் ஆகியவை நிறைந்தஓர் கொண்டாட்டமாக அமைகின்றது.
இந்த வருடம் இந்து கல்லூரி கொழும்பு தனது 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதால் இது அக் கல்லூரிக்கு மறக்க முடியாத ஓர் ஒப்பற்ற நிகழ்வாக அமையவுளளது.
இந்துக்களின் சமருடன் இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் வழமையான ‘சொல்லாடல்’ போட்டியும் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்த வருடம் முதல் தடவையாக இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைவிட இந்துக்களின் சமரில் புதிய அத்தியாயமாக இம்முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டி அறிமுகமாகிறது.
இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் மார்ச் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, இந்துக்களின் சமர் கிரிக்கெட் போட்டியில் நட்புறவுனுடனம் சிறந்த மனப்பான்மையுடனும் விளையாடுவதே தங்களது குறிக்கோள் என இந்து கல்லூரி அணித் தலைவர் ராமநாதன் தேஸ்கரும் யாழ். இந்து கல்லூரி அணித் தலைவர் எஸ். சுபர்மனும் தெரிவித்தானர்.
இலங்கையில் இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறும் ஒரே ஒரு மாபெரும் கிரிக்கெட் போட்டி இது என்பதால் இப்போட்டி மற்றெல்லா மாபெரும் கிரிக்கெட் போட்டிளைவிட சிறப்பு வாய்ந்த ஒன்றாக பாடசாலை கிரிக்கெட் வரலாற்று ஏடுகளில் பதிவாகிறது.
இப் போட்டிக்கு கடந்த இரண்டு வருடஙகளாக அனுசரணை வழங்கிவரும் ஜனசக்தி இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் கம்பனி இந்த வருடமும் அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
இதன் காரணமாக இப் போட்டி ஜனசக்தி லைவ் இந்துக்களின் சமர் என அழைக்கப்படுகிறது.
இப் போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிறைவேட் லிமிட்டெட் கம்பனியின் அனுசரணை கிடைப்பதற்கு பெரும் உதவியாக இருந்த சந்த்ரா ஷாவ்டர், ஜனசத்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே ஆகியோருக்கு இந்துக்களின் சமர் ஏற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இப் போட்டிக்கான அனுசரணையை சந்த்ரா ஷாவ்டர், ரவி லியனகே ஆகியோரிடம் இருந்து யாழ். இந்து கல்லூரி அதிபர் ரட்னம் செந்தில்நாதன், இந்து கல்லூரி கொழும்பு அதிபர் இளையத்தம்பி இலங்கேஸ்வரன் ஆகியோர் வைபவரீதியாக பெற்றுக்கொண்டனர்.

