வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் மார்ச் மாதம் 01 முதல் 03 ஆம் திகதி வரை ருமேனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, ருமேனியாவின் வெளிவிவகார அமைச்சர், தொழிலாளர், குடும்பம், இளைஞர் மற்றும் சமூக ஒற்றுமை அமைச்சர் மற்றும் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாக்கல், தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலா அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் ஹேரத் உயர்மட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இந்த சந்திப்புகள் கவனம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கட்டமைக்கப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை மேம்படுத்துதல், நிறுவன ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றில் குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு அமைச்சர்களும் கையெழுத்திடவுள்ளனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான முறையான கட்டமைப்பை நிறுவும், ஒத்துழைப்பு வெளிப்படையான, ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

