தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அரசியலமைப்பின் 22 ஆம் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முதலாம் வாசிப்புக்காக நாளை (18) சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு கூடவுள்ளது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டாண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 107 ஆம் உறுப்புரையின் 05 ஆம் பந்தியை நீக்கி அதற்கு திருத்தம் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் வயது 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் வயது 65 ஆகவும் இருத்தல் வேண்டும்.
அதேபோல் பிரதம நீதியரசர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 06 ஆண்டுகளுக்கு பதவியில் இருத்தல் வேண்டும் என குறிப்பிட்டு அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது.
அதேபோல் மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டாண்டுகளுக்கு அதிகரிக்கும் பொருட்டு 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இதற்கமைய நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களும் நாளை முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாட்டு மக்கள் எவரும் அரசியலமைப்பின் 121 ஆம் பிரிவின் பிரகாரம் இவ்விருச் சட்ட மூலங்களையும் இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை 03 வாரங்களுக்குள் சபாநாயகருக்கு அறிவிக்கும்.அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதேவேளை, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் நாளை சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதேபோல் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை சபையில் வெளிப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

