Sunday, April 19, 2026
Homeஅரசியல் கட்டுரைஇலங்கை தமிழரசுக் கட்சியின் பிரிவு ஏக்கிய இராச்சிய நோக்கில் தான்! சி.அ. யோதிலிங்கம் குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரிவு ஏக்கிய இராச்சிய நோக்கில் தான்! சி.அ. யோதிலிங்கம் குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவினர் சமஸ்டி எனக் கூறினாலும் “ஏக்கியராச்சிய” தீர்வுக்கு தயாராக இருக்கின்றார்கள் என சட்டதரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று(23.02.2026) வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன் முழு விபரமும் வருமாறு,

கடந்த வாரம் மூன்று முக்கிய விவகாரங்கள் தமிழ் அரசியலில் அவதானத்திற்குரியதாக இருந்தன.

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (ETRA) என்ற அமைப்பின் திருமலைப் பிரகடனம், தமிழ்த் தேசியப் பேரவையின் ஒழுங்கமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கலந்துரையாடல், அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு வருவதற்கான சுவிஸ் தூதரகத்தின் முயற்சிகள் நிறுத்தப்பட்டமை என்பனவே இந்த மூன்றுமாகும்.

அதில், ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் அங்குரார்ப் பணக்கூட்டமும், திருமலைப் பிரகடனம் வெளியிடலும் கடந்த 14ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது.

திருமலை ஆயர், தென்கயிலை ஆதீனம் முதல்வர், ஆகியோர் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் சுயாதீனமான சிவில் செயற்பாட்டாளர் பலரும் கலந்து கொண்டனர்.

கட்சிகள் எவையும் இல்லாத சிவில் தரப்பின் ஒன்றுகூடலாகவே இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்திலேயே “ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வைக் காண்பதற்கான உள்ளக முறைகளை நிராகரித்தலும், வெளியகப் பொறிமுறை உருவாக்குவதற்குமான மூலதத்துவங்கள்” என்ற தலைப்பில் 20 பக்க பிரகடனமும் வெளியிடப்பட்டது.

கண்ணன் என அழைக்கப்படும் ஞானேஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. அதிலும் குறிப்பாக பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு தொடர்பாகவே கருத்துக்கள் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டன.

பொறுப்புக்கூறலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதை இந்த அமைப்பினர் ஏற்கவில்லை.

அத்துடன், குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் படையினரை தனிப்பட்ட வகையில் குற்றவாளிகளாக்கலாமே தவிர சிறீலங்கா அரசினை குற்றவாளியாக்க முடியாது என்பது இவர்களது வாதமாகும். சர்வதேச நீதிமன்றம் நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளை விசாரிக்கும் மன்றமே ஒழிய போர்க் குற்றங்களை விசாரணை செய்யும் நீதிமன்றம் அல்ல.

சர்வதேச நீதிமன்றத்தில் அரசின் பொறுப்பை முன்வைக்க வேண்டும் என கூறுகின்றனர். அதற்கான அணுகுமுறை என்ன என்பது பற்றி தெளிவாக கூறவில்லை.

அதேவேளை, தனி நபர் குற்றப் பொறுப்பை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லாத சர்வதேச தீர்ப்பாயம் போன்ற பொறிமுறை மூலம் முன்வைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதற்கான அணுகுமுறை பற்றியும் எதுவும் கூறவில்லை.

ஜெனிவா அமர்வுகளின் போது தமிழ்த் தேசிய பேரவையின் முயற்சியினால் யாழ். நகரில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று ஐ. நா மனித உரிமைகள் பேரவையிடம் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இதற்கான பதிலையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி இருந்தார். அந்த அறிக்கையினை இந்த ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றைச் சேர்ந்தவர்கள் ஏற்கவில்லை.

இதற்கு மாற்றாக சர்வதேச நீதி மன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனவும், தனி நபர் குற்றப் பொறுப்பை சர்வதேச தீர்ப்பாயத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனக் கோரி மாற்று அறிக்கையொன்றை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பியிருந்தனர்.

ஒரு விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படுவது தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த குரலைப் பாதிக்கும் என்ற விமர்சனம் அப்போது பலராலும் முன்வைக்கப்பட்டது. அரசியல் தீர்வு தொடர்பாக உள்ளக பொறிமுறைகளை இந்த அமைப்பினர் ஏற்கவில்லை. வெளியகப் பொறிமுறையே தேவை என வற்புறுத்துகின்றனர்.

உள்ளக பொறி முறைகள் தோல்வியில் முடிந்துள்ளன என்பதே இவர்களது கருத்து. அரசியல் தீர்வுச் செயற்பாடுகள் சர்வதேசச் சட்டத்திற்கிணங்க, சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் இடம் பெற வேண்டும் என்பதே இவர்களது வாதம் “சமஸ்டி” தீர்வு முன்வைப்பதையும் இவர்கள் ஏற்கவில்லை.

தமிழ்த் தேசியப் பேரவையினர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்ராலின் மூலம் முன்வைத்த சுயநிர்ணய சமஸ்டித் தீர்வையும் இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனைக் கண்டித்து பிரான்சில் கஜேந்திரகுமாரின் கொடும்பாவியும் இவர்களினால் எரிக்கப்பட்டது.

தற்போது கூட என்ன வகையான தீர்வு தேவை என்பதை சொல்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சிறீலங்கா அரசாங்கம் எந்தவித தீர்வையும் தரப்போவதில்லை. எனவே வெளியக சுயநிர்ணயக் கோரிக்கைக்கு பாதிப்பு வரக் கூடிய யோசனை எவற்றையும் முன்வைக்க கூடாது என்பதே இவர்களது வாதம். வெறுமனவே கொள்கையளவில் அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டுமே தவிர நடைமுறை வடிவில் முன் வைக்கக் கூடாது என இவர்கள் கருதுவது போல தெரிகின்றது.

நடைமுறை வடிவத்தை முன் வைக்காத வரை வெளியக சுயநிர்ணயம் தான் கோரிக்கையாக இருக்கும் என இவர்கள் கருதலாம். இலங்கையில் 6வது திருத்தம் நடைமுறையில் உள்ளது. எனவே வெளியக சுயநிர்ணயக் கோரிக்கையை வெளிப்படையாக இலங்கையில் இருப்பவர்களினால் வைக்க முடியாது.

உள்ளக சுய நிர்ணயக் கோரிக்கையினையே முன் வைக்கலாம் என்பது இதனை மறுப்பவர்களின் வாதமாக உள்ளது. எனவே தாயகத்தில் இருப்பவர்கள் கொள்கையும் நடைமுறையும் கலந்த வகையில் கோரிக்கைகளை முன்வைக்க முனைகின்றார்கள்.

அரசியல் தீர்வு தமிழ் மக்களின் பொது வாக்குகெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படல் வேண்டும் என்பது இன்னோர் கோரிக்கையாக உள்ளது. கஜேந்திரகுமார் இதனை நிராகரிக்கின்றார். பொது வாக்கெடுப்பு 1977 தேர்தலில் நடத்தப்பட்டு விட்டது.

அந்த தேர்தலை தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்று கூறியே தமிழர் விடுதலைக் கூட்டணியினர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் மக்கள் அங்கீகாரத்தையும் வழங்கினர். இந்த ஆணையை மதிப்பிறக்கம் செய்யக்கூடிய பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்பது கஜேந்திரகுமாரின் வாதமாக உள்ளது.

கடந்த 15ஆம் திகதி யாழ்நகரில் இடம் பெற்றிருந்த கூட்டத்திலும் அவர் அதனை வெளிப்படுத்தியிருந்தார். அரசியல் தீர்வு தொடர்பாக நான்கு வகையான கோரிக்கைகள் தமிழ் தரப்பிடமிருந்து எழுந்துள்ளன.

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று வெளியக சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைக்கின்றது. புலம்பெயர் தரப்பிலும் பலர் முன்வைக்கின்றனர்

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை முன்வைக்கின்றது. தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவினர் சமஸ்டி எனக் கூறினாலும் “ஏக்கியராச்சிய” தீர்வுக்கு தயாராக இருக்கின்றார்கள்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்துடன் திருப்திப்பட முனைகின்றது. இவ்வாறு நான்கு வகையான கோரிக்கைகள் இருப்பது அரசியல் தீர்வுக் கோரிக்கையினை பலவீனப்படுத்தவே செய்யும்.

இரண்டாவது முக்கிய விவகாரம் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை நிராகரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவையினர் சிவில் தரப்பையும் இணைத்து கூட்டப்பட்ட ஒன்று கூடலாகும். கடந்த 15ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த ஒன்றுகூடல் இடம் பெற்றது. சுமார் 200 பேர் வரை ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத்தலைவர் விக்னேஸ்வரன் கூட்டத்தை நெறிப்படுத்தினார். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். “ஏக்கியராச்சிய” அரசியல் வரைவை முற்றாக நிராகரித்தல், தமிழ்த் தேசம் என்ற அரசியல் அடையாளத்தை அங்கீகரித்தல், ஈழத் தமிழர்களின் இறைமை சுயநிர்ணயம் என்பவற்றை அரசியல் தீர்வின் அடிப்படையாக வலியுறுத்தல்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13வது திருத்தத்துடன் திருப்திப்பட முனைகின்றது. இவ்வாறு நான்கு வகையான கோரிக்கைகள் இருப்பது அரசியல் தீர்வுக் கோரிக்கையினை பலவீனப்படுத்தவே செய்யும்.

இரண்டாவது முக்கிய விவகாரம் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை நிராகரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவையினர் சிவில் தரப்பையும் இணைத்து கூட்டப்பட்ட ஒன்று கூடலாகும். கடந்த 15ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த ஒன்றுகூடல் இடம் பெற்றது. சுமார் 200 பேர் வரை ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத்தலைவர் விக்னேஸ்வரன் கூட்டத்தை நெறிப்படுத்தினார். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். “ஏக்கியராச்சிய” அரசியல் வரைவை முற்றாக நிராகரித்தல், தமிழ்த் தேசம் என்ற அரசியல் அடையாளத்தை அங்கீகரித்தல், ஈழத் தமிழர்களின் இறைமை சுயநிர்ணயம் என்பவற்றை அரசியல் தீர்வின் அடிப்படையாக வலியுறுத்தல்.

கஜேந்திரகுமார் “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையை நிராகரிப்பது தொடர்பாகவும், புதிய அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்குவது தொடர்பாகவும் அண்மைக்காலமாக பல முயற்சிகளைச் செய்து வந்தார். முதலில் தமிழத் தேசியக் கட்சிகளை இது விடயத்தில் ஒருமித்த கருத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சித்தார். அதற்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கவில்லை.

பின்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். ஒப்பந்தம் எழுதியமை காய்வதற்கு முன்னரே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தை சிதறடித்தது. எழுத்து மூலம் ஒப்பந்தங்களுக்கு மதிப்புக் கொடுக்கும் பழக்கம் அதனிடம் ஒரு போதும் இருந்தது கிடையாது.

இறுதியாக சிறிய கட்சிகளை தமிழ்த் தேசியப் பேரவையில் இணைத்துக் கொண்டு சிவில் அமைப்புக்களுடன் கூட்டிற்கு வந்துள்ளார். இதில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று கூறவேண்டும்.

இந்தக் கூட்டு தொடர்வதற்கான சாத்தியங்கள் நிறையவே உள்ளன. தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவு சங்குக் கூட்டணியோடு சேர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தனிமைப்படுத்த முனைந்தது. தற்போது தமிழ்த் தேசியப் பேரவை மக்களுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் தமிழரசுக் கட்சியையும் சங்குக் கூட்டணியையும் தனிமைப்படுத்த முனைகின்றது.

அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் இணைந்து செயற்படுவது இது மூன்றாவது பரீட்சார்த்த முயற்சியாகும். முதலில் தமிழ் மக்கள் பேரவை மூலம் அந்த முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விலகியதன் மூலம் அது பலவீனமடைந்தது. இரண்டாவது தடவை ஜனாதிபதி பொது வேட்பாளர் மூலம் அந்த முயற்சி எடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பொதுச்சபையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து அந்த முயற்சி எடுக்கப்பட்டது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி குழப்பியதால் அதுவும் தோல்வியடைந்தது. இந்த இரண்டு முயற்சிகளையும் சிவில் தரப்புக்களே முன்னின்று மேற்கொண்டமை முக்கியமானதாகும்.

தற்போதைய முயற்சியை அரசியல் கட்சி முன்னின்று மேற்கொண்டதால் இதன் ஆயுள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது ஏறத்தாழ தேசிய மக்கள் சக்தி உருவாக்கியதைப் போன்றது.

மூன்றாவது விவகாரம், சுவிஸ்லாந்தின் முயற்சி இடைநிறுத்தப்பட்டதாகும். சுமந்திரன் கலந்துகொள்ள மாட்டோம் எனக் கூறியதனாலேயே அது இடைநிறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரவை 15ஆம் திகதி கூட்டத்தை ஒழுங்கு செய்தமையினால் இன்னோர் சந்திப்பு தேவையில்லை என அவர் காரணம் கூறியிருக்கின்றார்.

15ஆம் திகதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழரசுக்கட்சியோ ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதில் கலந்து கொள்ளவில்லை. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிவில் தரப்புடன் சந்திப்பதற்கு முன்னர் கட்சிகள் சந்திப்பது நல்லது என்ற அபிப்பிராயத்தை முன் வைத்தனர்.

கடந்த 14ஆம் திகதி சந்திக்கலாம் எனக் கூறியபோதும் கால அவகாசம் போதாது எனக் கூறி மறுத்துவிட்டனர். இறுதியில், இந்த விரண்டு தரப்புகளினதும் பிரசன்னம் இல்லாமலேயே சிவில் தரப்புடன் சந்திப்பு இடம் பெற்றது.

சுமந்திரன், சுவிஸ்லாந்து தூதரகரத்தின் கலந்துரையாடலை நிறுத்தியமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

  1. கஜேந்திரகுமார் சிவில் தரப்புடன் இணைந்து எடுத்த முடிவு என ஒன்றை முன்வைத்தால் அதனை நிராகரிக்க முடியாத நிலை ஏற்படும்.
  2. சுமந்திரன் எப்போதும் தனித்து ஓடுவதையே விரும்புவர். கட்சிகள் சிவில் தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டால் தனித்து ஓட முடியாத நிலை ஏற்படும். “ஏக்கியராச்சிய” தீர்வு யோசனையையும் நிலை நாட்ட முடியாது என அவர் கருதியிருக்கலாம்.

ஆக மொத்தத்தில் கிடைத்த வலுவான சந்தர்ப்பத்தை சுமந்திரன் குழப்பி அழித்துள்ளார் என்றே கூற வேண்டும். சர்வதேச ஒழுங்குபடுத்தலில் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள் அரசியல் ரீதியில் எப்போதும் பலமுடையதாக இருக்கும். அந்த வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks