Thursday, September 3, 2026
Homeசர்வதேசம்சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு விமானங்கள் நடுவானில் அருகருகே ஆபத்தான பயணம்!

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு விமானங்கள் நடுவானில் அருகருகே ஆபத்தான பயணம்!

அமெரிக்காவில் ஒரே விமான எண்ணைக் கொண்ட இரு விமானங்கள் ஒரே நேரத்தில் வான்பரப்பில் ஆபத்தான வகையில் மிக அருகில் பயணித்தபோதும், விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுர்யமான செயற்பாட்டினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் சிகாகோ மற்றும் பீனிக்ஸ் நகரங்களுக்கு இடையிலான சேவைக்கு ‘பிளைட் 2482’ என்ற எண்ணைப் பயன்படுத்தி வருகிறது. வழக்கமாக ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் வான்பரப்பில் சந்திக்காத வகையிலேயே இதற்கான அட்டவணை திட்டமிடப்பட்டிருக்கும்.

கடந்த 14ஆம் திகதி இரவு 10:43 மணிக்கு பீனிக்ஸ் சென்றடையவேண்டிய சிகாகோ விமானம், சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக நள்ளிரவு 12:13 மணிக்கே சென்றடைந்துள்ளது.

அதேவேளை, பீனிக்ஸ் நகரில் இருந்து சிகாகோ நோக்கிச் செல்லவேண்டிய மற்றொரு ‘பிளைட் 2482’ விமானம், திட்டமிட்டபடி நள்ளிரவு 11:59 மணிக்கு புறப்பட்டது. இதன் காரணமாக, ஒரே எண்ணைக் கொண்ட இரு விமானங்களும் ஒரே வான்பரப்பில் ஒரே நேரத்தில் பறக்கும் சூழல் உருவானது.

தாமதமாக சென்ற சிகாகோ விமானத்தின் விமானி, தரையிறங்குவதற்காக பீனிக்ஸ் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கேட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான் அதே ‘2482’ எண் கொண்ட மற்றொரு விமானத்துக்குத் டேக்-ஆப் அனுமதி அளித்திருந்த கட்டுப்பாட்டு அதிகாரி, மீண்டும் அதே எண்ணில் அனுமதி கேட்கப்பட்டதும் உடனடியாக சிந்தித்து அவதானமாக செயற்பட்டார்.

நிலைமையை உடனடியாகக் கணித்த அவர், இரு விமானங்களின் விமானிகளையும் தொடர்புகொண்டு எச்சரித்ததுடன், அவற்றுக்கிடையே பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்து, விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்க வழிகாட்டினார்.

தமது 25 ஆண்டுகால அனுபவத்தில் இப்படி ஒரு நிகழ்வை தான் சந்தித்ததே இல்லை எனப் பூரிப்புடன் குறிப்பிட்ட அந்த அதிகாரியின் சாதுரியமான நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதேவேளை ஒரே எண் கொண்ட இரு விமானங்கள் ஒரே நேரத்தில் வான்பரப்பில் சந்திக்கும் வகையில் பயண அட்டவணையை எவ்வாறு திட்டமிட்டார்கள் என்பது குறித்துப் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks